Monday, July 13, 2015

வேதத்தின் அபௌருஷேயத்வம்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்   
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar

பௌருஷேயமென்பது யாவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்ற நூல்களுள் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஸ்ரீராமாயணம் வான்மீகி முனிவரால் இயற்றப் பட்டதென்கிறோம். இதிலிருந்து "இயம் ஸீதா மம ஸுதா" [इयं सीता मम सुता] என்கிற வொரு ச்லோகத்தைக் கொள்வோம். இதில் இயம், ஸீதா, மம, ஸுதா என்கிற பதங்கள் வரிசையாகத் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்பதங்கள் வான்மீகி முனிவரால் புதிதாக வுண்டாக்கப் பட்டவை யல்ல வென்பது அனைவருமறிந்ததே. ஆனால் வான்மீகி முனிவர் செய்ததென்ன? தான் வெளிப்படுத்தக் கருதிய பொருள்களை வெளிப் படுத்துவதற்கு வேண்டியபடி பதங்கள் முன்பின்னாகச் சேர்த்துப் பிணைத்ததே வான்மீகி செய்த காரியம். இதைக் கொண்டே நாம் ஸ்ரீராமாயணம் வான்மீகி செய்ததென்றும் மற்றொன்று மற்றொருவர் செய்த தென்றும் வழங்கிவருகிறோம். அஸ்மாதாதிகளால் இயற்றப் படுகிற க்ரந்தங்கள் வரையில் உலகில் பௌருஷேயங்களாகச் சொல்லப்பட்டு வருகிற எல்லா நூல்களுக்கும் இதுவே நியாயம்.

இனி அபௌருஷேயமாகச் சொல்லப்படுகிற வேதத்திலிருந்து ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். "शं नो मित्रः शं वरुणः" [சம் நோ மிதிர: சம் வருண:] என்னும் வாக்யத்தை கொள்வோம். இதிலுள்ள பதங்களை இப்பொழுது காணப்படும் வரிசை க்ரமமாகச் சேர்த்தது யார்? என்று ஆராய வேண்டும். அப்படி சேர்த்துப் பிணைத்தவர் யாராவது இருப்பரேயானால் அவரே வேதங்களைச் செய்தவர் எனத் தகும். ஆனால் அப்படிப் பட்டவர் ஒருவருமிலர். ஏனெனில் அப்படிப் பட்டவர் யாரேனுமொருவர் இருப்ப்ராயின், மஹாபாரதம், ஸ்ரீராமாயணம் முதலிய க்ரந்தங்களைச் செய்த வ்யாஸர், வால்மீகி முதலியவர்களின் பெயர்களைப் பரம்பரையாக நாம் எப்படி சொல்லி வருகிறோமோ அப்படி வேதகர்த்தாவின் பெயரையும் சொல்லி வந்திருக்க வேணும். உண்மையில் ஒருவர்  இருந்திருப்பாரானால் அவர் பெயரை நாம் பரம்பரையாகச் சொல்லி வந்தேயிருப்போம். நம் முன்னோர்களின் எந்த நூலிலும் வேத கர்த்தாவின் பெயரை நாம் காண்கின்றிலோம். கர்பரம்பரையாகவும் கேட்கின்றிலோம். ஸாதாரணமான சிறு சிறு நூல்களின் கர்த்தாக்களினது பெயர்களை நாம் பரம்பரையாகத் தெரிந்து கொண்டிருக்கும் போது, மிகவும் பெரிதாய் முக்கியமான வேதத்திற்கு கர்த்தாவின் பெயரை நாம் கேட்கவும் பெறாமலிருப்பதால் உண்மையில் வேத கர்த்தா ஒருவருமில்லை எனவே நிச்சயிக்க தட்டில்லை. இதுவே பௌருஷேயங்களில் காட்டிலும் அபௌருஷேயத்திற்குண்டான வாசி. அந்தந்த நூலாசிரியர்கள் தாங்கள் ச்லோகங்களை யமைக்கும்போது தங்களுக்கு இஷ்டமான பதங்களை வரிசைக் கிராமமாக அமைத்து முதன் முதலாகச் சொன்னார்கள். பிறகு அதையொட்டி அதே வரிசைக் கிராமத்தில் பின்னுள்ளோரும் சொல்லி வருகிறார்கள். ஆனாலும் பதங்களின் வரிசைக் க்ரமத்தை முதன் முதலாக் அமைத்தவர் ஒருவராதலால் அவரையே உலகம் நூலாசிரியராக வழங்கி வர ப்ராப்தமாகின்றது. வேதத்தை நாமெல்லாரும் ஓதுகின்றோமானாலும் வேதத்திலுள்ள பதங்களின் வரிசைக் கிரமத்தை அமைத்தவர் ஒருவருமில்லை யாகையால் வேதகர்த்தா ஒரு வருமில்லை என்று கொள்ளத் தட்டில்லை.

ஆக இவ்வளவால் வேதத்திற்கு பௌருஷேயத்வமாகிறவொரு சிறப்பை விவரித் தோமேயானோம். இனி வேதத்திற்கு நித்யத்வமாகிற சிறப்பைப் பற்றித் தெரிவிப்போம்.
 
Source:
அறுபத்துமூன்று உபன்யாஸமாலை - (25), 1954, pp. 58-59.
-- From my Collections.

No comments:

Post a Comment