Tuesday, July 14, 2015

ஈச்வரன் சாஸ்த்ரைக வேத்யன்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்   
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar

ஈச்வரனை யொபுக்கொள்ளாத நாஸ்திக மதங்கள் கிடக்க; ஈச்வரனுளனென்று ஒப்ப்புக் கொள்பவர்களுள் தார்க்கிகன் அனுமானத்தினால் ஈச்வரனை ஸாதிக்கின்றான். உலகத்தில் காணப்படுகின்ற பானை, துணி, வீடு, மண்டபம், கோபுரம் முதலிய பொருள்களெல்லாம் ஒரு கர்த்தாவையோ பல கர்த்தாக்களையோ உடையனவாகியே யிருப்பதால் இப்பிரபஞ்சமும் ஒரு கர்த்தாவை யுடையதாகியே யிருக்கவேண்டும்; அந்த கர்த்தாவே ஈச்வரன் -- என்பது தார்க்கிகர்களின் அனுமானம். இவ்வநுமானங் கொண்டு ஈச்வரனை ஸாதிப்பது தவறு; ஏனெனில், இவ்வனுமாநத்தினால் ஈச்வரனே தேறவேணுமென்கிற நிர்ப்பந்த மில்லை. விச்வாமித்ர முனிவரும் பல ஸ்ருஷ்டிகளைச் செய்து விட்டதாக நாம் ஸ்ரீராமாயணம் முதலிய நூல்களைக் கொண்டு அறிவதால் அம் முனிவரைப்போன்ற விலக்ஷண சக்திவாய்ந்த ஒரு ப்ருஷன் பிரபஞ்சத்திற்குக் கர்த்தாவாகத் தேறலாம்.

தவிரவும், தர்க்கமென்பது ஒரு நிலையில் நில்லாது. தர்க்கமென்பது யுக்திவாதந்தானே. அது அவரவர்களுடைய வாக் சாதுர்யத்தைப் பொறுத்தது. ஒரு தர்க்கம் மற்றொரு தர்க்கத்தினால் தள்ளுண்டு போகவுங் காண்கிறோம். இங்கும் ஆங்ஙனேயாகுமாகில், பிரபஞ்சமெல்லாம் இயற்கையாகவே தோன்றுகின்ற தென்னும் நிரீச்வரவாதமே முடிவு பெறக்கூடும். அவ்வபாயத்திற்கு இடமறும்படி வ்யாஸமுனிவர் தாம் செய்த (பிரஹ்மஸூத்ர மென்னும்) சாரீரக மீமாம்ஸையில், "शास्त्रयोनित्वात्" -- "சாஸ்த்ரயோநித்வாத்" என்றொரு ஸூத்ரமியற்றி வேத சாஸ்த்ரங்களைக் கொண்டே ஈச்வரன் அறியத்தக்கவன் என்று முடிவு செய்தார். நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் "உளன் சுடர் மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே" என்கிற பாசுரத்தினால் தமது ஸித்தாந்தவுமதுவே என்று காட்டியருளினார்.

 Source:
அறுபத்து மூன்று உபன்யாஸமாலை - (32), 1954, Part I, p. 67.
From my Collections.

No comments:

Post a Comment