Monday, July 13, 2015

வேதத்தின் நிர்தோஷத்வம்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்   
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar


வேதமென்பது சப்தராசி (शब्दराशि:) என்று முன்பு கூறினோம். சப்தத்திற்கு தோஷமாவது என்னவென்று விமர்சிக்க வேணும். பிசகான பொருளைத் தெரிவிப்பதே சப்தத்திற்கு தோஷமாம்; தனிப்பட்டவொரு பதம் பிசகான பொருளைத் தெரிவிக்க மாட்டாது. மண், மணல், வீடு, காடு, பானை, துணி....என்று தனித் தனியே சொல்லப்படும் சொற்களானவை பிசகான பொருளைத் தெரிவிக்க பிரஸக்தியில்லை என்பதை யாவருமறியலாம். பல பதங்கள் சேர்ந்த வாக்கியம் தப்பான பொருளை தெரிவிக்கும். "இது வெள்ளி" என்ற இரண்டு சொற்கள் தனித் தனி இருக்குமானால் எவ்விதமான தப்புப் பொருளையும் தெரிவிக்கமாட்டாது. ஆனால் இவ்விரண்டு சொற்களையும் ஒன்று சேர்த்து ஈயத்தை சுட்டிக் காட்டி இது வெள்ளி என்று பிரயோகிக்கப்பட்டால், வெள்ளியல்லாததை வெள்ளி என்று போதிப்பதால் இவ்வாக்கியம் தோஷமுடையதென்று கொள்ளப்படும். இவ்வாக்கியம் இப்படி தப்பான பொருளை போதிக்கக் காரணமென்ன? இரண்டு சொற்களுள்ள இவ்வக்யத்தில் என்ன தோஷமிருக்கிறது?

இச்சொற்கள் தனித்தனியே பிரயோகிக்கப்பட்டபோது எப்படியிருந்தனவோ அப்படியே தானே கூட்டிச்சொன்ன போதுமிருக்கின்றன; சொல்லில் எவ்விதமான தோஷமும் காண முடியாது. ஆனா பின்பு இவ்வாக்கியம் தப்பான பொருளைப் போதிப்பதேன்? எனில்; இதை பிரயோகித்த புருஷன் இச்சொற்றொடரைச் சரியாக உபயோகியாமல் தப்பாக உபயோகித்ததே இது தப்பான பொருளைக் காட்டுவதற்கு காரணமாயிருக்கின்றது. 

மனிதர்களுக்கு இயற்கையாகவே சில தொஷங்களுண்டு; அவை, ப்ரமம், பிரமாதம், விப்ரலிப்ஸை, முதலியனவாம். 

பிரமமாவது ஒன்றை வேறொன்றாக எண்ணுவது. இது இருவகைப்படும் -- விபரீத ஜ்ஞானமென்றும் அன்யதா-ஜ்ஞானமென்றும். 

ஒரு வஸ்துவை வேறொரு வஸ்துவாக தெரிந்துகொள்வது விபரீதஜ்ஞானம்; ஈயத்தை வெள்ளியாகத் தெரிந்து கொள்வது, கயிற்றை பாம்பாக தெரிந்து கொள்வது, இவை போல்வன விபரீதஜ்ஞானமாம்

ஒரு வஸ்துவை உள்ளபடி அந்த வஸ்துவாகவே தெரிந்து கொண்டிருக்கச்செய்தேயும் அதிலுள்ள தன்மையை வேறாகத் தெரிந்து கொள்வது அன்யதாஜ்ஞானமெனப்படும். வெண்ணிறமுள்ள சங்கை மஞ்சள் நிறமாக காண்பது அது. இவ்விரண்டு வகையான ப்ரமமும் மனுஷ்யனுடைய தோஷமாகும். மனுஷ்யன் வஸ்துவை உள்ளபடி அறிந்து கொள்ளாமற் போகையே பிரமிக்கையாம். 

இனி பிரமாதமாவது பிசகிப்போதல். பதரிகாச்ரமம் என்று சொல்ல மனதில் நினைத்திருந்து ப்ருந்தாவனம் என்று சொல்லுதல் போன்றவை இதற்கு உதாரணமாம். இதுவும் மனிதர்களுக்குள்ள தோஷமாகும். 

இனி விப்ரலிப்ஸையாவது பிறரை வஞ்சிக்கவேணுமென்கிற விருப்பம். தனக்கு யதார்த்தமான ஜ்ஞானமிருக்கச் செய்தேயும் பிறரை ஏமாற்ற வேணுமென்கிற எண்ணங்கொண்டு கயிற்றை காட்டி பாம்பென்பது, பித்தளையைக் காட்டிப் பொன் என்பது முதலான வ்யவஹாரங்களானவை விப்ரலிப்ஸை என்னும் குற்றத் தினாலாமவை. 

மனிதனிடத்துள்ள இத்தகைய தொஷங்களானவை அவனால் பிரயோகிக்கப் படுகிற சொற்றொடர்களைக் குற்றமுடையனவாகச் செய்கின்றன. ஆக மனிதனுடைய தொஷங்களே சப்தம் அப்ரமாணமாவதற்குக் காரணமென்றும், சப்தத்தில் இயற்கையாக தோஷமில்லை என்றும் நிரூபித்தோமானோம். 

இங்ஙனம் புருஷனுடைய தோஷங்களால் அப்ரமாணமாகும் சப்தங்கள் எவை என்றால், அந்தப் புருஷன் ஒரு அர்த்தத்தைக் காட்டுவதற்காகப் பல சொற்களை வேண்டியபடி சேர்த்து வாக்கியமாக பிரயோகிக்கும் சப்தங்களேயாம். வேதமென்கிற சப்தராசியானது எந்த புருஷனாலும் தன்னிஷ்டப்படி முன் பின்னாகப் பிணைக்கப் பட்டவையல்லவென்றும் நித்யமென்றும் முன்னே சொன்னோமாதலால் புருஷனுடைய தோஷங்களால் துஷ்டமாகக் கூடிய நிலைமை வேதங்களுக்கு இல்லையென விளங்கிற்று. ஆகையால் வேதம் நிர்தோஷமென்ன தட்டில்லை. ஈச்வரன் வேதகர்த்தவல்லவா? என்று சிலர் கேட்கிற கேள்விக்கும் ஸமாதான முரைப்போமினி.

Source:
அறுபத்து மூன்று உபன்யாசமாலை - (27), 1954, pp. 60-61.
From my Collections.

No comments:

Post a Comment