Saturday, July 11, 2015

முஸலகிஸலயம் (Musalakisalayam)

வித்வான்கள் உகக்கும் ஹாஸ்ய கதை ஒன்று

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar

ஒரு வித்வான் தம்முடைய பரமஸுந்தரியான மகளுக்கு வரன் தேடிக் கொண்டிருந்தார். அவரும் அவருடைய குமாரர்களும் இப்பெண்ணும் ஆக எல்லாரும் நன்கு ஸம்ஸ்க்ருதம் படித்தவர்களாதலால் நன்றாகப் படித்த வரன் வேணுமென்று தேடிக் கொண்டிருந்தார். ஒருவர் தம்முடைய குமாரனுக்கு நல்ல படிப்பு இருப்பதாகப் பொய் சொல்லி வஞ்சித்து விவஹத்தை முடித்துக் கொண்டார். அந்த மணவாளப்பிள்ளை பாடசாலைக்குப் போய் வந்து கொண்டிருந்ததனால் மெய்யே படிப்பாளியென்று மாமனார் முதலானவர்களும் ப்ரமித்திருந்தார்கள். விவாஹமோ முடிந்துவிட்டது.

இப்படியிருக்கையில், ஸரஸ்வதீபூஜையன்று முதல் நாள் ஜாமாதாவை மாமனார் தம் இல்லம் வரும்படி அழைத்தார். ஜாமாதாவும் தன் தகப்பனாரிடம் உத்தரவு பெற்றுக் கொள்ள சென்றான். அப்போது தகப்பனார் "பயலே! உனக்கோ படிப்பு ஒன்றும் பலிக்கவில்லை; உன்னை மஹாபண்டிதனாக நான் பொய் சொல்லி ஏதோ விவாஹத்தை முடித்துவைத்தேன். உன் சாயம் வெளிப்படுவதற்கு இன்று சந்தப்பம் வந்துவிட்டதே! வேறு பண்டிகை நாள்களாக இருந்தால் பாதகமில்லை; இப்போது ஸரஸ்வதி பூஜைக்காக உன்னை யழைக்கிறார்கள். அவர்களெல்லோரும் பெரிய பண்டிதர்களாகையால் அவர்களில்லத்தில் பல பல புஸ்தகங்களுண்டு; அவற்ற்றை யெல்லாம் உன் மாமனாரும் மைத்துனர்மார்களும் எடுத்துப் பரிஷ்காரப்படுத்துவார்கள்; அந்த ஸமயத்தில் நீ அவர்களெதிரில் ஊமைபோல் உட்காந்திருக்க வேண்டியதாகும். உன்னுடைய சாயம் வெளிப்படுவதோடு நில்லாமல் என்னுடைய பொய்ம்மையும் வெளியாகிவிடுமே என்று அஞ்சுகிறேன்" என்றார். அதற்கு அவன் ஒன்றும் பதில் சொல்லமாட்டாமல் தலை குனிந்து நின்றான்.

மறுபடியும் தகப்பனார், "பயலே! நான் ஒரு உபாயம் சொல்லித் தருகிறேன்; நாளை காலை அவசியம் வருவதாக அவர்களுக்கு நீ பதில் சொல்லியனுப்பிவிடு; இன்றிரவு முழுவதும் ஸம்ஸ்க்ருதத்தில் நாலிரண்டு வார்த்தை உனக்கு வரும்படி நெட்டுருப் போட்டு வைக்கிறேன். அதை நீ நாளைக்கு அங்கு உபயோகப்படுத்தினால் ஒருவாறு மானத்தோடு திரும்பி வரலாம்" என்றார். குமாரன் அப்படியே இசைந்தான். 

தகப்பனார் அன்றிரவு முழுவதும் மகனுக்கு பாடம் பண்ணி வைத்தது என்னவென்றால்; உன் மாமனார் ஏதாவது ஒரு பெரிய புஸ்தகம் எடுத்தாரானால் அப்போது நீ, "கிம் இதம் புஸ்தகம்" [किमिदं पुस्तकम्?] என்று கேள்; அவர் இன்ன புஸ்தகமென்று பதில் சொல்லுவர்; அப்போது நீ "இதம் மயா படிதம்" [इदं मया पठितम्] என்று சொல்லு; மறுபடியும் அவர் வேறொரு பெரிய புஸ்தகமெடுக்கும்போதும், "கோயம் ஸ்ரீகோச:" [कोऽयं श्रीकोश:] என்று கேள்; அவர் பதில் சொன்னவுடனே "எததபி மாயா அதீதம்" [एततपि मय अधीतम्] என்று சொல்லு. என்றிப்படிச் சிலவார்த்தைகளை வெகு சிரமப்பட்டுக் கற்பித்து வைத்தார். அவற்றை அப்படியே க்ல்ப்தி செய்துகொண்டு மறுநாள் காலை மாப்பிள்ளை மாமனாரகத்திற்குச் சென்று சேர்ந்தாயிற்று. முன்னாளிரவெல்லாம் நெட்டுருப்போட்ட ஸம்ஸ்க்ருத வார்த்தைகளை உபயோகப்படுத்த ஸமயமும் வாய்த்து விட்டது.

ஸரஸ்வதீ பூஜைக்கு ஆரம்பித்த மாமனார் ஒரு பெரிய ஓலைச் சுவடியை அவிழ்த்தார். "கிம் இதம் புஸ்தகம்" [किमिदं पुस्तकम्?] (இது என்ன புஸ்தகம்?) என்று ஜாமாதா கேட்டார். அதற்கு மாமனார் "அயம் தசோபநிஷத் பாஷ்ய ஸ்ரீகோச:" [अयं दशोपनिषद्भाष्यश्रीकोश: - இது தசோபநிஷத் பாஷ்ய ஸ்ரீகோசம்] என்றார். உடனே மாப்பிள்ளை, "இதம் மயா படிதம்" [इदं मया पठितम्] (இது நான் வாசித்திருக்கிறேன்) என்றான். அது கேட்டு எல்லோரும் ஸந்தோஷித்தார்கள்.
 
மாமனார் மறுபடியும் ஒரு புஸ்தகம் அவிழ்த்தார். "கோயம் ஸ்ரீகோச:?" [कोऽयं श्रीकोश:? - இது என்ன ஸ்ரீகோசம்? ] ன்றான் ஜாமாதா. "சாபரபாஷ்யமிதம்" [शाबरभाष्यमिदम् - இது சபரருடைய பாஷ்யம்] என்றார் மாமனார். "எததபி மயா அதீதம்" [एततपि मया अधीतम्] (இதுவும் நான் வாசித்திருக்கிறேன்) என்றான் ஜாமாதா. இது கேட்டும் எல்லாரும் மஹாநந்தமடைந்தார்கள்.

மாமனார் வேறொரு பெரிய புஸ்தகம் அவிழ்த்தார். அஃது என்னவென்றால், இனி மேல் எழுதுவதற்காக ஏடுகளை சேமித்து வைத்திருக்கிற எழுதாத புஸ்தகம். "கோயம் ஸ்ரீகோச:?" [कोऽयं श्रीकोश:? - இது என்ன ஸ்ரீகோசம்?] என்றார் ஜாமாதா. "அலேகக்ரந்த:" [अलेखग्रन्थ:] (எழுதாத எடு), என்றார் மாமனார். "இதமபி மயா படிதம்" [इदमपि मया पठितम्] (இதுவும் நான் வாசித்திருக்கிறேன்) என்றார் ஜாமாதா. அது கேட்டவுடனே அவர்களுக்கு துக்கம் தாங்க முடியாததாயிற்று. இந்த ஜாமாதாவின் மனைவியும் நன்றாகப் படித்தவளாகையாலே இப்படிப்பட்ட "உலக்கைகொழுந்து" புத்திசாலியான பர்த்தா நமக்கு வாய்ந்தானே! என்று சோகம் பொறுக்ககில்லாமல் "முஸலகிஸலயமே!" [உலக்கைகொழுந்தே!] என்று சொல்லி அவன் தலையில் ஒரு குட்டுக் குட்டி சென்றாளாம். அவன் அந்த அவமானம் பொறுக்கமாட்டாமல் உடனே எழுந்து வெளியேற காசிக்குச் சென்று வெகு ஆஸ்தையுடன் வாசித்து சதுச்சாஸ்த்ர பண்டிதனாய் மீண்டுவந்து "முஸலகிஸலயம்" [मुसलकिसलयम्] என்கிற ஒரு க்ரந்தத்தை இயற்றினானாம். இந்த க்ரந்தம் இப்போதும் கிடைக்கிறதென்கிறார்கள்.

சென்னை ஸ்ரீவைஷ்ணவ க்ரந்த முத்ராபகசபயில் அச்சிட்ட (தெலுங்குலிபி) ஸம்ப்ரதாய அகராதியில் "அழகிய மணவாள சீயர்" என்ற திருநாமத்தின் விவரணத்தில் இந்த "முஸலகிஸலய" க்ரந்த நாம நிர்தேசமும் வேறொரு கதையும் காண்கிறது; அது ஸம்ப்ரதாய கோஷ்டியில் ஏற்பட்ட கதையென்பர்.
 

Source:
-- அறுபத்துமூன்று உபன்யாஸமாலை - (53), 1954, pp.32-34.
-- From my collections.

1 comment: