Saturday, July 11, 2015

சாஸ்த்ரஜ்ஞானமும் உபதேசவுணர்ச்சியும்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar

शास्त्रज्ञानं  बहुक्लेशं बुद्धेश्चलनकारणम् ।
उपदेशाद्धरिं बुद्ध्वा विरमेत्सर्वकर्मसु ॥
śāstra-jñanaṁ bahu-kleśaṁ buddheś-calanakāraṇam
upadeśādd-hariṁ buddhvā viramet sarvakarmasu
சாஸ்த்ர-ஜ்ஞாம் பஹு-க்லேசம் புத்தேச் சலநகாரணம்
உபதேசாத் ஹரிம் புத்த்வா விரமேத் ஸர்வ-கர்மஸு

என்பது நம் அசாரியர்கள் எடுத்துக்காட்டும் பிரமாண வசனங்களுள் ஒன்று. இதன் பொருளாவது சாஸ்த்ரங்களை வாசித்து ஞானம்  பெறுவதென்பது கடினமானது; சிரமப்பட்டுப் பெற்றாலும் புத்தி சலிப்பதற்கே ஹேதுவாகும்; தெளிவு உண்டாகாது. ஆகவே மஹாசார்யர்களின் திருவடிவாரத்தில் காத்திருந்து அவர்களிடம் உபதேசங்கள் கேட்டு அவ்வழியாலே பகவானை யறிந்துகொண்டு சகல கர்மங்களிலும் ஓய்ந்திருக்கவேண்டும் – என்பதாம். இதனால் சாஸ்த்ரங்களை வாசிக்கக் கூடாதென்று கட்டளை இடுவதாக நினைக்கலாகாது. எத்தனை சாஸ்திரங்கள் வாசித்தாலும் ஆசார்யர்கள் ஸாரமான பொருளை திரட்டி எடுத்து உபதேசிக்கக் கேட்டாலொழியத் தெளிவு பிறவாது. ஆகவே உபதேசம் கேட்பதுதான் முக்கியம் என்னுமிவ்வளவே இந்த வசனத்தின் கருத்தாகத் தேறும். நமது ஸம்பிரதாயத்தில் ஆசார்யர்கள் பரம்பரையாக வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்யவேணுமானால் சாஸ்த்ரஜ்ஞான ஸம்பன்னர்களாயிருந்தாலொழியச் செய்யமுடியாது. உபதேசம் கேட்கிற சிஷ்யர்கள் பிறகு ஆசார்ய பதவியில் அமர்ந்து தாங்கள் தம் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்ய வேணுமானால் தாம் சாஸ்த்ரஜ்ஞான ஸம்பன்னர்களாயிந்தாலொழியச் செய்யமுடியாது; இப்படி சிஷ்யாசார்ய க்ரமம் தொடர்ந்து வருமிடத்து சாஸ்த்ரஜ்ஞானஸம்பத்து இன்றியமையாததாகும். ஆகவே “சாஸ்த்ரஜ்ஞானம் பஹுக்லேசம்” என்கிற இந்த வசனமானது சாஸ்த்ரஜ்ஞானம் ஸம்பாதிக்கவேண்டாமென்று சொல்லவந்ததன்று என்றும் உபதேசம் பெறவேண்டியது ஆவச்யகம் என்பதை வற்புறுத்தவே வந்ததென்றும் கொள்ளக்கடவது.

Source:
-- எழுபத்திரண்டு நல்வார்த்தைத்திரள், 1961, pp. 33-34.
-- From my collections.

No comments:

Post a Comment