Showing posts with label Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar. Show all posts
Showing posts with label Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar. Show all posts

Tuesday, July 14, 2015

ஈச்வரன் சாஸ்த்ரைக வேத்யன்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்   
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar

ஈச்வரனை யொபுக்கொள்ளாத நாஸ்திக மதங்கள் கிடக்க; ஈச்வரனுளனென்று ஒப்ப்புக் கொள்பவர்களுள் தார்க்கிகன் அனுமானத்தினால் ஈச்வரனை ஸாதிக்கின்றான். உலகத்தில் காணப்படுகின்ற பானை, துணி, வீடு, மண்டபம், கோபுரம் முதலிய பொருள்களெல்லாம் ஒரு கர்த்தாவையோ பல கர்த்தாக்களையோ உடையனவாகியே யிருப்பதால் இப்பிரபஞ்சமும் ஒரு கர்த்தாவை யுடையதாகியே யிருக்கவேண்டும்; அந்த கர்த்தாவே ஈச்வரன் -- என்பது தார்க்கிகர்களின் அனுமானம். இவ்வநுமானங் கொண்டு ஈச்வரனை ஸாதிப்பது தவறு; ஏனெனில், இவ்வனுமாநத்தினால் ஈச்வரனே தேறவேணுமென்கிற நிர்ப்பந்த மில்லை. விச்வாமித்ர முனிவரும் பல ஸ்ருஷ்டிகளைச் செய்து விட்டதாக நாம் ஸ்ரீராமாயணம் முதலிய நூல்களைக் கொண்டு அறிவதால் அம் முனிவரைப்போன்ற விலக்ஷண சக்திவாய்ந்த ஒரு ப்ருஷன் பிரபஞ்சத்திற்குக் கர்த்தாவாகத் தேறலாம்.

தவிரவும், தர்க்கமென்பது ஒரு நிலையில் நில்லாது. தர்க்கமென்பது யுக்திவாதந்தானே. அது அவரவர்களுடைய வாக் சாதுர்யத்தைப் பொறுத்தது. ஒரு தர்க்கம் மற்றொரு தர்க்கத்தினால் தள்ளுண்டு போகவுங் காண்கிறோம். இங்கும் ஆங்ஙனேயாகுமாகில், பிரபஞ்சமெல்லாம் இயற்கையாகவே தோன்றுகின்ற தென்னும் நிரீச்வரவாதமே முடிவு பெறக்கூடும். அவ்வபாயத்திற்கு இடமறும்படி வ்யாஸமுனிவர் தாம் செய்த (பிரஹ்மஸூத்ர மென்னும்) சாரீரக மீமாம்ஸையில், "शास्त्रयोनित्वात्" -- "சாஸ்த்ரயோநித்வாத்" என்றொரு ஸூத்ரமியற்றி வேத சாஸ்த்ரங்களைக் கொண்டே ஈச்வரன் அறியத்தக்கவன் என்று முடிவு செய்தார். நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் "உளன் சுடர் மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே" என்கிற பாசுரத்தினால் தமது ஸித்தாந்தவுமதுவே என்று காட்டியருளினார்.

 Source:
அறுபத்து மூன்று உபன்யாஸமாலை - (32), 1954, Part I, p. 67.
From my Collections.

Monday, July 13, 2015

ஈச்வரனும் வேதகர்த்தாவல்லன்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்   
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar


ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் ஈச்வரன் நான்முகனுக்கு வேதோபதேசம் செய்வதாக சொல்லப்படுகிறதே, ஸ்ருஷ்டிக்கு முன்பு வேதம் இருக்க முடியாதே. ஆகையால் தான் முதலில் வேதம் இயற்றப்பட்டிகுக்க வேணுமென்று ஏற்படுகிறதே, ஆனபின்பு வேதம் அபௌருஷேய மென்பது எங்ஙனே? என்ன வேண்டா. உண்மை  என்னவெனில், வேதத்திற்கு நாம் எப்படி கர்த்தாக்களல்லோமோ அப்படியே ஈச்வரனும் கர்த்தாவல்லன்; உலகத்தில் ஸ்ருஷ்டியானது ஒன்றன்பின் ஒன்றாக அநாதிகாலமாய் நடந்து வருகின்றது. ஒவ்வொரு கல்பத்தின் ஆரம்பத்திலும் ஈச்வரன் நான்முகனுக்கு வேதத்தை உபதேசிக்கிறான். ஆனால் முன் கல்பத்தில் வேதம் எவ்விதமான வரிசைக் கிராமத்தோடு இருந்ததோ அவ்விதமாகவே மறு கல்பத்தின் ஆரம்பத்திலும் வேதம் உபதேசிக்கப்படுகிறது. எவ்விதமான மாறுபாடும் செய்யப்படுவதில்லை. அநாதி காலமாக இங்ஙனமே நிகழ்ந்து வருகின்றது. வேதத்தின் விஷயத்தில் ஈச்வரனுடைய செயல் இவ்வளவே. புதிதாக வேதம் நிருமிக்கப்படுகிறதென்பது ஒருநாளிலுமில்லை. ஆகவே ஈச்வரனும் வேதகர்த்தாவல்லன்

ஸ்ம்ருதி, இதிஹாஸம், புராணம் என மற்றும் பல் வகை நூல்களுமுள்ளன. ஆனால் வேதம் எப்படி அநாதி காலமாய் சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரையாய் ஒதப்பட்டு வருகிறதோ அப்படி மற்ற நூல்கள் ஓதப்பட்டு வருவதில்லை. அந்தணன், க்ஷத்ரியன், வைச்யன் என்ற மூன்று வர்ணத்தினரும் தவறாமல் வேதமோதியே தீரவேண்டுமென்றும், ஆசார்யமுகத்தினாலேயே வேதம் அதிகரிக்கப்படவேண்டுமென்ரறும் நியமங்களை ஏற்படுத்தி, இந்த விதிகளை மீறினால் ப்ராயச்சித்த்ங்களும் விதிக்கப்பட்டிருப்பதினாலேயே புத்திக்கு எட்டாத காலம் முதல் ஒரே விதமாக வேதமும் ஓதப்பட்டு வருவதோடு எவ்விதமான சந்தேஹத்திற்கும் இடமின்றியுமிருக்கிறது. ஆக, இப்படி வேதம் அபௌருஷேயமாய் நித்யமாய் நிர்தோஷமாய் இடையறாத பரம்பரையில் வருவதாயிருப்பதனாலே ஆரியர்களான நமக்குப் பரம ப்ரமாணமாயுள்ளது.  

கீழே நிரூபித்த அதிசயங்கள் தவிர மற்றோரதிசயமுமுண்டு வேதத்திற்கு. அதாவது இவ்வளவென்று எல்லை காண வொண்ணாதபடி அளவற்றிருக்கை. இவ்விஷயம் வேதத்திலேயே -- "अनन्ता वै वेदाः" (அனந்தா வை  வேதா:) -- என்று கூறப்பட்டுள்ளது. ஆக, வேதம் அபௌருஷேயமாய் நித்யமாய் நிர்தொஷமாய் அனந்தமாயிருந்து கொண்டு பரம ப்ரமணமானதென்று வேதத்தின் பெருமை விவரிக்கப்பட்டதாயிர்று.

Source:
அறுபத்து மூன்று உபன்யாசமாலை - (28), 1954, pp. 61-62.
From my Collections.

வேதத்தின் நிர்தோஷத்வம்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்   
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar


வேதமென்பது சப்தராசி (शब्दराशि:) என்று முன்பு கூறினோம். சப்தத்திற்கு தோஷமாவது என்னவென்று விமர்சிக்க வேணும். பிசகான பொருளைத் தெரிவிப்பதே சப்தத்திற்கு தோஷமாம்; தனிப்பட்டவொரு பதம் பிசகான பொருளைத் தெரிவிக்க மாட்டாது. மண், மணல், வீடு, காடு, பானை, துணி....என்று தனித் தனியே சொல்லப்படும் சொற்களானவை பிசகான பொருளைத் தெரிவிக்க பிரஸக்தியில்லை என்பதை யாவருமறியலாம். பல பதங்கள் சேர்ந்த வாக்கியம் தப்பான பொருளை தெரிவிக்கும். "இது வெள்ளி" என்ற இரண்டு சொற்கள் தனித் தனி இருக்குமானால் எவ்விதமான தப்புப் பொருளையும் தெரிவிக்கமாட்டாது. ஆனால் இவ்விரண்டு சொற்களையும் ஒன்று சேர்த்து ஈயத்தை சுட்டிக் காட்டி இது வெள்ளி என்று பிரயோகிக்கப்பட்டால், வெள்ளியல்லாததை வெள்ளி என்று போதிப்பதால் இவ்வாக்கியம் தோஷமுடையதென்று கொள்ளப்படும். இவ்வாக்கியம் இப்படி தப்பான பொருளை போதிக்கக் காரணமென்ன? இரண்டு சொற்களுள்ள இவ்வக்யத்தில் என்ன தோஷமிருக்கிறது?

இச்சொற்கள் தனித்தனியே பிரயோகிக்கப்பட்டபோது எப்படியிருந்தனவோ அப்படியே தானே கூட்டிச்சொன்ன போதுமிருக்கின்றன; சொல்லில் எவ்விதமான தோஷமும் காண முடியாது. ஆனா பின்பு இவ்வாக்கியம் தப்பான பொருளைப் போதிப்பதேன்? எனில்; இதை பிரயோகித்த புருஷன் இச்சொற்றொடரைச் சரியாக உபயோகியாமல் தப்பாக உபயோகித்ததே இது தப்பான பொருளைக் காட்டுவதற்கு காரணமாயிருக்கின்றது. 

மனிதர்களுக்கு இயற்கையாகவே சில தொஷங்களுண்டு; அவை, ப்ரமம், பிரமாதம், விப்ரலிப்ஸை, முதலியனவாம். 

பிரமமாவது ஒன்றை வேறொன்றாக எண்ணுவது. இது இருவகைப்படும் -- விபரீத ஜ்ஞானமென்றும் அன்யதா-ஜ்ஞானமென்றும். 

ஒரு வஸ்துவை வேறொரு வஸ்துவாக தெரிந்துகொள்வது விபரீதஜ்ஞானம்; ஈயத்தை வெள்ளியாகத் தெரிந்து கொள்வது, கயிற்றை பாம்பாக தெரிந்து கொள்வது, இவை போல்வன விபரீதஜ்ஞானமாம்

ஒரு வஸ்துவை உள்ளபடி அந்த வஸ்துவாகவே தெரிந்து கொண்டிருக்கச்செய்தேயும் அதிலுள்ள தன்மையை வேறாகத் தெரிந்து கொள்வது அன்யதாஜ்ஞானமெனப்படும். வெண்ணிறமுள்ள சங்கை மஞ்சள் நிறமாக காண்பது அது. இவ்விரண்டு வகையான ப்ரமமும் மனுஷ்யனுடைய தோஷமாகும். மனுஷ்யன் வஸ்துவை உள்ளபடி அறிந்து கொள்ளாமற் போகையே பிரமிக்கையாம். 

இனி பிரமாதமாவது பிசகிப்போதல். பதரிகாச்ரமம் என்று சொல்ல மனதில் நினைத்திருந்து ப்ருந்தாவனம் என்று சொல்லுதல் போன்றவை இதற்கு உதாரணமாம். இதுவும் மனிதர்களுக்குள்ள தோஷமாகும். 

இனி விப்ரலிப்ஸையாவது பிறரை வஞ்சிக்கவேணுமென்கிற விருப்பம். தனக்கு யதார்த்தமான ஜ்ஞானமிருக்கச் செய்தேயும் பிறரை ஏமாற்ற வேணுமென்கிற எண்ணங்கொண்டு கயிற்றை காட்டி பாம்பென்பது, பித்தளையைக் காட்டிப் பொன் என்பது முதலான வ்யவஹாரங்களானவை விப்ரலிப்ஸை என்னும் குற்றத் தினாலாமவை. 

மனிதனிடத்துள்ள இத்தகைய தொஷங்களானவை அவனால் பிரயோகிக்கப் படுகிற சொற்றொடர்களைக் குற்றமுடையனவாகச் செய்கின்றன. ஆக மனிதனுடைய தொஷங்களே சப்தம் அப்ரமாணமாவதற்குக் காரணமென்றும், சப்தத்தில் இயற்கையாக தோஷமில்லை என்றும் நிரூபித்தோமானோம். 

இங்ஙனம் புருஷனுடைய தோஷங்களால் அப்ரமாணமாகும் சப்தங்கள் எவை என்றால், அந்தப் புருஷன் ஒரு அர்த்தத்தைக் காட்டுவதற்காகப் பல சொற்களை வேண்டியபடி சேர்த்து வாக்கியமாக பிரயோகிக்கும் சப்தங்களேயாம். வேதமென்கிற சப்தராசியானது எந்த புருஷனாலும் தன்னிஷ்டப்படி முன் பின்னாகப் பிணைக்கப் பட்டவையல்லவென்றும் நித்யமென்றும் முன்னே சொன்னோமாதலால் புருஷனுடைய தோஷங்களால் துஷ்டமாகக் கூடிய நிலைமை வேதங்களுக்கு இல்லையென விளங்கிற்று. ஆகையால் வேதம் நிர்தோஷமென்ன தட்டில்லை. ஈச்வரன் வேதகர்த்தவல்லவா? என்று சிலர் கேட்கிற கேள்விக்கும் ஸமாதான முரைப்போமினி.

Source:
அறுபத்து மூன்று உபன்யாசமாலை - (27), 1954, pp. 60-61.
From my Collections.

வேதமே பரம பிரமாணம்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்   
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar

நாம் எந்த அர்த்தத்தை அறுதியிட வேணுமானாலும் ஒரு பிரமாணத்தைக் கொண்டே அறுதியிட வேண்டி யிருக்கிறது. 

मानाधीना मेयसिद्धिः
மானாதீனா மேயஸித்தி:

என்பது சாஸ்த்ரஜ்ஞர்களின் கோஷ்டியில் பிரசித்தமானதொரு வார்த்தை. மானமென்றது பிரமாணமென்றபடி. மேயமென்றது ப்ரமேயமென்றபடி.

प्रमाणाधीना प्रमेयसिद्धिः
பிரமாணாதீனா ப்ரமேயஸித்தி:

என்றதாகத் தேறிற்று. யதார்த்த ஜ்ஞானமுண்டாவதற்கு ஸாதனமானது எதுவோ அதுதான் ப்ரமாணமெனப்படுகிறது. ப்ரத்யக்ஷம், அனுமானம் என்னுமிவையும் ப்ரமாண மானாலும் அவை துர்பல ப்ரமாணங்களேயாகும்; சாஸ்த்ரமொன்றே பிரபல ப்ரமாணமாகும். இதை செய்;  இதை செய்யாதே யென்று விதி நிஷேத ரூபமான கட்டளைகளை வெளியிடுவது எதுவோ; அதுவே சாஸ்த்ரமெனப்படும்.

वेदाच्छास्त्रं परं नास्ति
வேதாத் சாஸ்த்ரம் பரம் நாஸ்தி

என்று வ்யாஸ மஹர்ஷி சபதம் பண்ணிக் கூறியிருக்கையாலே "வேதத்திற்கு மேற்பட்ட சாஸ்திர மில்லை" என்பது வைதிகர்களின் கொள்கை. நம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் இக்கொள்கையையே வெளியிட்டுள்ளார்கள். "உளன் சுடர் மிகு சுருதியுள்" என்றார் நம்மாழ்வார்;

आदौ वेदाः प्रमाणम्
ஆதௌ வேதா: ப்ரமாணம்

என்றார் பட்டர். வைதிகர்களான நாம் ஸ்ம்ருதீதிஹாஸ புராணாதிகளையும் ப்ரமாணமாகக் கொள்பவர்களேயானாலும் அவை ஸ்வத: பிரமாணமல்ல; பரத: பிரமாணம் எனப்படும். வேதம் ஸ்வத: ப்ரமாணம் என்று ஒப்பு கொள்ளப் பட்டிருக்கிறது.

வேதமென்கிற சொல்லுக்கு பொருள் என்னவென்றால்,

वेदयतीति वेदः
வேதயதீதி வேத:

தெரிவிப்பது வேதம். எதை தெரிவிப்பது என்றால், பிரத்யக்ஷத்தாலும் அனுமானத்தினாலும் தெரிந்து கொள்ளமுடியாத விஷயங்களை எல்லாம் தெரிவிப்பது என்றபடி.

विदन्ति अनेनेति वेदः  

என்றாலுமுண்டு. இதற்கு "கரணே வ்யுத்பத்தி" [करणे व्युत्पत्ति] என்று பெயர்.

प्रत्यक्षेणानुमित्या वा यस्तूपायो न बुद्ध्यते
यत्तं विदन्ति वेदेन तस्माद्वेदस्य वेदता 

என்றார்கள் மஹர்ஷிகளும். இந்த வசனத்தின் பொருளையே கீழே நாம் வெளியிட்டது. ஆக ஸகலார்த்தங்களையும் வெளியிடுவதாய் அத எவ வேத மென்று பேர் பெற்றதான பிரமாண ரத்னத்திற்குப் பல பெருமைகளுள்ளன.

அவையாவன -- அபௌருஷேயத்வம், நித்யத்வம், நிர்தோஷத்வம், அனந்தத்வம்  என்னுமிவை. இவற்றை அடைவே விவரிக்கிறோம்.

அபௌருஷேயத்வமாவது ஒருவராலும் செய்யப்படாததா யிருக்கை. ஒரு புருஷனால் இயற்றப்பட்டது பௌருஷேய மெனப்படும்; அங்ஙநல்லாதது அபௌருஷேயம். வேதம் ஒரு வராலும் இயற்றப்படாததாகையாலே அபௌருஷேய மெனப்படுகிறது. 

புருஷனால் இயற்றப் படாதது என்று கேட்டவுடனே சிலர் "வேதம் ஸ்த்ரீயால் இயற்றப் பட்டது போலும்" என்று பேசத் தலைப் படுகிறார்கள். இங்கு புருஷ சப்தமானது ஸ்த்ரீபுமானாகிய சேதன ஸாமான்யத்தை சொல்லுவதாகையாலே ஒரு நபராலும் இயற்றப்பட்டதன்று என்னும் பொருளிலேயே அபௌருஷேய மென்கிற சொல் தோன்றி யுள்ளது. 

இனி அபௌருஷேயமாயிருக்க எப்படி முடியும்? என்கிற ஆக்ஷேபத்தை சிறிது விவரிப்போம். அநேக சப்தங்களின் ராசியே யன்றோ வேதமெனப் படுகிறது; கண்டம், தாலு, பல், உதடு, முதலிய முகத்திலுள்ள உறுப்புகளினின்று வெளியாகும் ஒலியே யல்லவா சப்தம்; ஒவ்வொரு சப்தமும் புருஷனால் செய்யப்பட்டுத் தானே வெளியாகின்றது. புருஷன் வெறுமனே யிருந்தாநாகில் சப்தம் வெளி வரவே முடியாதன்றோ. ஆகவே வேதமாகிற சப்தராசிகளும் புருஷனால் உண்டாக்கப் பட்டு பௌருஷேயமாகத்தானே யிருக்க வேண்டும்; அபௌருஷேய மென்று எங்ங்னே சொல்லலாம்? என்பது சிலருடைய ஆக்ஷேபம்; அல்லது ஆசங்கை.

இதற்கு ஸமாதானம் கூறுவோம். 
 


Source:
அறுபத்துமூன்று உபன்யாஸமாலை - (24), 1954, pp. 57-58.
-- From my Collections.

வேதத்தின் அபௌருஷேயத்வம்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்   
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar

பௌருஷேயமென்பது யாவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்ற நூல்களுள் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஸ்ரீராமாயணம் வான்மீகி முனிவரால் இயற்றப் பட்டதென்கிறோம். இதிலிருந்து "இயம் ஸீதா மம ஸுதா" [इयं सीता मम सुता] என்கிற வொரு ச்லோகத்தைக் கொள்வோம். இதில் இயம், ஸீதா, மம, ஸுதா என்கிற பதங்கள் வரிசையாகத் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்பதங்கள் வான்மீகி முனிவரால் புதிதாக வுண்டாக்கப் பட்டவை யல்ல வென்பது அனைவருமறிந்ததே. ஆனால் வான்மீகி முனிவர் செய்ததென்ன? தான் வெளிப்படுத்தக் கருதிய பொருள்களை வெளிப் படுத்துவதற்கு வேண்டியபடி பதங்கள் முன்பின்னாகச் சேர்த்துப் பிணைத்ததே வான்மீகி செய்த காரியம். இதைக் கொண்டே நாம் ஸ்ரீராமாயணம் வான்மீகி செய்ததென்றும் மற்றொன்று மற்றொருவர் செய்த தென்றும் வழங்கிவருகிறோம். அஸ்மாதாதிகளால் இயற்றப் படுகிற க்ரந்தங்கள் வரையில் உலகில் பௌருஷேயங்களாகச் சொல்லப்பட்டு வருகிற எல்லா நூல்களுக்கும் இதுவே நியாயம்.

இனி அபௌருஷேயமாகச் சொல்லப்படுகிற வேதத்திலிருந்து ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். "शं नो मित्रः शं वरुणः" [சம் நோ மிதிர: சம் வருண:] என்னும் வாக்யத்தை கொள்வோம். இதிலுள்ள பதங்களை இப்பொழுது காணப்படும் வரிசை க்ரமமாகச் சேர்த்தது யார்? என்று ஆராய வேண்டும். அப்படி சேர்த்துப் பிணைத்தவர் யாராவது இருப்பரேயானால் அவரே வேதங்களைச் செய்தவர் எனத் தகும். ஆனால் அப்படிப் பட்டவர் ஒருவருமிலர். ஏனெனில் அப்படிப் பட்டவர் யாரேனுமொருவர் இருப்ப்ராயின், மஹாபாரதம், ஸ்ரீராமாயணம் முதலிய க்ரந்தங்களைச் செய்த வ்யாஸர், வால்மீகி முதலியவர்களின் பெயர்களைப் பரம்பரையாக நாம் எப்படி சொல்லி வருகிறோமோ அப்படி வேதகர்த்தாவின் பெயரையும் சொல்லி வந்திருக்க வேணும். உண்மையில் ஒருவர்  இருந்திருப்பாரானால் அவர் பெயரை நாம் பரம்பரையாகச் சொல்லி வந்தேயிருப்போம். நம் முன்னோர்களின் எந்த நூலிலும் வேத கர்த்தாவின் பெயரை நாம் காண்கின்றிலோம். கர்பரம்பரையாகவும் கேட்கின்றிலோம். ஸாதாரணமான சிறு சிறு நூல்களின் கர்த்தாக்களினது பெயர்களை நாம் பரம்பரையாகத் தெரிந்து கொண்டிருக்கும் போது, மிகவும் பெரிதாய் முக்கியமான வேதத்திற்கு கர்த்தாவின் பெயரை நாம் கேட்கவும் பெறாமலிருப்பதால் உண்மையில் வேத கர்த்தா ஒருவருமில்லை எனவே நிச்சயிக்க தட்டில்லை. இதுவே பௌருஷேயங்களில் காட்டிலும் அபௌருஷேயத்திற்குண்டான வாசி. அந்தந்த நூலாசிரியர்கள் தாங்கள் ச்லோகங்களை யமைக்கும்போது தங்களுக்கு இஷ்டமான பதங்களை வரிசைக் கிராமமாக அமைத்து முதன் முதலாகச் சொன்னார்கள். பிறகு அதையொட்டி அதே வரிசைக் கிராமத்தில் பின்னுள்ளோரும் சொல்லி வருகிறார்கள். ஆனாலும் பதங்களின் வரிசைக் க்ரமத்தை முதன் முதலாக் அமைத்தவர் ஒருவராதலால் அவரையே உலகம் நூலாசிரியராக வழங்கி வர ப்ராப்தமாகின்றது. வேதத்தை நாமெல்லாரும் ஓதுகின்றோமானாலும் வேதத்திலுள்ள பதங்களின் வரிசைக் கிரமத்தை அமைத்தவர் ஒருவருமில்லை யாகையால் வேதகர்த்தா ஒரு வருமில்லை என்று கொள்ளத் தட்டில்லை.

ஆக இவ்வளவால் வேதத்திற்கு பௌருஷேயத்வமாகிறவொரு சிறப்பை விவரித் தோமேயானோம். இனி வேதத்திற்கு நித்யத்வமாகிற சிறப்பைப் பற்றித் தெரிவிப்போம்.
 
Source:
அறுபத்துமூன்று உபன்யாஸமாலை - (25), 1954, pp. 58-59.
-- From my Collections.

வேதத்தின் நித்யத்வம்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்   
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar

நம்முடைய சித்தாந்தத்தில், நித்ய வஸ்துக்கள் இரண்டு வகையாக ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கின்றன -- ஸ்வரூப நித்யமென்றும், ப்ரவாஹ நித்ய மென்றும். (ஸ்வரூப நித்யமாவது) எந்த வஸ்துக்கள் முக்காலங்களிலும் ஒரே தன்மையை உடையனவாய்க் கொண்டு ஒருகாலும் அழிவு இல்லாமல் இருக்கின்றனவோ அவை ஸ்வரூப நித்யமெனப்படும். மூல பிரக்ருதியும் ஜீவாத்மாக்களும் பரமாத்மாவும் மேலே சொன்ன லக்ஷணத்திற்கு லக்ஷ்யமாயிருக்கையாலே ஸ்வரூப நித்யமாம். இம் மூன்று பொருள்களின் ஸ்வரூபமும் எப்போதும் ஒரே தன்மையை யுடைத்தாய் என்றுமழியாமலிருக்கின்றது. எம்பெருமான் எந்த அவதார மெடுத்தாலும் அவனுடைய ஸ்வரூபத்தில் எவ்விதமான மாறுதலும் உண்டாவதில்லை. ஜீவாத்மாக்கள் தாம் செய்யும் கருமங்களுக்கு -- [நல்வினை தீவினைகளுக்கு] ஏற்பப் பல சரீரங்கள் எடுத்தாலும் ஸ்வரூபத்தில் எவ்வகைத்தான மாறுதலும் உண்டாவதில்லை. மாறுதலாவது விகாரம்; இது இரண்டு விதம்; ஸ்வரூபத்தைப் பற்றியதும் ஸ்வபாவத்தைப் பற்றியதுமாம். ஈசவரனுக்கு இவ்விரண்டு விதமான விகாரங்களும் கிடையாது. ஜீவாத்மாவுக்கு ஸ்வரூப விகாரமில்லை எனினும்  ஸ்வபாவ விகாரம் மாத்ரமுண்டு. பத்தன் (बद्धः) என்றும் முமுக்ஷு (मुमुक्षुः) என்றும் முக்தன் (मुक्तः) என்றும் இங்ஙனே ஸ்வபாவம் மாறுகின்றதன்றோ. மூல ப்ரக்ருதியின் ஸ்வரூபம் எப்போதும் விகாராஸ்பதமாகவே யிருந்தாலும் அது என்று மழியாத நித்ய வஸ்து வென்று ச்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப் பட்டிருப்பதால் மூல ப்ரக்ருதியும் ஸ்வரூப நித்யமேயாம். ஆகவே இம்மூவகைப் பட்ட பொருள்களும் ஸ்வரூப நித்யங்களாம்.

இனி घटपटादिपदार्थ-கடபடாதிபதார்த்த-ங்கள் (பானை, துணி முதலிய பொருள்கள்) ப்ரவாஹ நித்ய மெனப்படும். இவை அழியும் பொருளாயிருக்க, எப்படி நித்யவஸ்துவாக சொல்லப் படலாமென்று கேள்வி பிறக்கும். இவை அழியாப் பொருளல்ல வென்பது உண்மையே. ஆனாலும் ஒரு பானை உடைந்து போய்விட்டாலும் அதுபோன்ற பல பானைகள் உலகத்தில் இடைவிடாது இருந்து கொண்டே இருக்கின்றன்; "பானை இல்லை" என்கிற சொல் எந்தக் காலத்திலும் கிடையாது.  இங்கு பானை என்றொரு பொருளை எடுத்துக் காட்டினது உபலக்ஷணம்.

அழியும் பொருள்களென்று நாம் காண்கிற எப்பொருளும் இப்படியே. ஆகவே, எச்சாதிப் பொருள்களுள் ஒன்று நசித்தாலும் மற்றொன்று இருந்து கொண்டே இருக்குமோ, உலகமுள்ள எக்காலத்திலும் அச்சாதிப் பொருள் இல்லை என்பது கிடையாதோ, அச்சாதி பொருள்கள் பிரவாஹ நித்ய மென்றதாகும். வேதமும் இந்த பிரவாஹ நித்ய கோஷ்டியில் சேர்ந்தது. அனந்த கோடி ப்ரஹ்மாண்டங்களுள் ஏதாவதொன்றில் எந்த மூலையிலாவது ஒருவன் வேதத்தை ஓதிக்கொண்டு தான் இருக்கிறான். வேத வொலி யில்லாத காலமே கிடையாது. எல்லாரும் ஒரே வகையில் தான் வேதத்தை ஓதி வருகிறார்கள். ஆகவே வேதம் பிரவாஹ நித்யம்.

இக்காலத்து ஆராய்ச்சியாளர்கள் வேதம் இன்ன காலத்தில் உண்டாயிற்றென்று தாங்கள் கண்டு பிடித்து விட்டதாகக் கூறிச் சில பாமரர்களை மயக்குகிறார்கள். ருக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம், அதர்வண வேதம் என்று சொல்லப்படுகிற நால்வகை வேதங்களுள் ஒவ்வொன்றிலும் அபரிமிதமான சாகைகள் உள்ளன. அவை சிறிதும் மாறுபடாத ஸ்வரத்துடன் உலகமெங்கும் கோடிக்கணக்கான அந்தணர்களால் ஒரே விதமாக ஓதப் பட்டு வருகின்ற ஓர் அதிசயத்தை ஆராய்ந்தால் இது அனாதியே என்பதை, பிடிவாதமுள்ளவர்களின் மனமும் இசைந்து தீரும். பத்து ச்லோகங்களையோ பத்து செய்யுள் களையோ புதிதாக இயற்றி இதை சென்னை மாநகரிலுள்ளவர்கள் கண்டபாடம் செய்து ஒரே விதமாய் ஒரே ஸ்வரமாய்ச் சொல்லி வரவேணும் என்று அரசாங்கத்தார் கட்டளை இட்டுப் பார்க்கட்டும். இது நடை பெறாதென்பது திண்ணம். கரை கட்டாக் காவேரிபோன்ற வேதராசிகளோ ஸகல நகரங்களிலும் ஸகல அக்ரஹாரங்களிலும் ஸகல கிராமங்களிலும் இமவந்தன் தொடங்கி இருங்கடலளவான எல்லாவிடங்களிலும் ஒருவருடைய கட்டளை யினாலன்றிக்கே அனாதிகாலமாக ஏகரீதியாய் ஓதப்பட்டு வருகிறபடியால் பகவானைப் போலவே வேதமும் நித்ய மென்பது நிராக்ஷேபமானது. இனி வேதத்திற்கு நிர்தோஷத்வமென்கிற சிறப்புப் பற்றி விவரிக்கிறோம்.


 Source:
அறுபத்துமூன்று உபன்யாஸமாலை - (26), 1954, pp. 59-60.
-- From my collections.

Sunday, July 12, 2015

பணத்திற்குப் பங்காளிகள்

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்   
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar

நமக்கு பித்ரு பிதாமஹ பரம்பரா ப்ராப்தமும் ஸ்வயார்ஜிதமுமாக இரு வகைப்  பட்ட பணங்களுண்டு. இவற்றை கொள்பவர்கள் புத்ராதிகளும் ஜ்ஞாதிகளுமென்று நாம் நினைக்கிறோம். சாஸ்த்ரம் சொல்லுகிறது என்னவென்று பார்ப்போம்.

चत्वारो धनदायादाः धर्माग्निनृपतस्कराः ।
ज्येष्ठपुत्रावमानेन त्रयः कुप्यन्ति सोदराः ॥
catvāro dhana-dāyādāḥ dharma-agni-nṛpa-taskarāh
jyeṣṭhaputra-avamānena trayaḥ kupyanti sodarāḥ
சத்வாரோ தன-தாயாதா: தர்மாக்னி ந்ருப-தஸ்கரா:
ஜ்யேஷ்ட-புத்ராவமாநேன த்ரய: குப்யந்தி ஸோதரா:

என்கிற ச்லோகம் பிரசித்தமானது; பணத்தைக் கொள்ளை கொள்ளுமவர்கள் நால்வர்; தர்மம், அக்னி, அரசர், கள்ளர் -- ஆக இந்நால்வரும் சஹோதரர்கள். பணம் படைத்தவர்க்குப் புத்ரர்கள் என்று கொள்க. இவர்களுள் ஜ்யேஷ்ட புத்ரன் (அல்லது, ஜ்யேஷ்ட ப்ராதா) தர்மமென்பவன். யஜுர்வேதத்தில், இரண்டாவது காண்டத்தில், ஐந்தாவது ப்ரச்னத்தில்,

तस्माज्ज्येष्ठं पुत्रं धनेन निरवसाययन्ति

என்று ஓதியிருக்கையாலே ஜ்யேஷ்டபுத்ரனே தனங்கொள்ள ப்ராப்தனாகையாலே, மேலே சொன்ன ஜ்யேஷ்டனாகிய தர்ம விஷயத்தில் தனத்தை யிட்டால் மற்ற ப்ராதாக்கள் மூவரும் சீற்றம் கொள்ளாமல் சமாஹித மனஸ்கர்களாயிருப்பர்கள். பிதாவானவர் (பணம் படைத்தவர்) ஜ்யேஷ்ட புத்ரனை அவமானப்படுத்தினால் (அதாவது தர்ம விஷயத்தில் பணச் செலவு செய்யாமற்போனால் மற்ற ப்ராதாக்கள் மூவரும் (அக்னி, அரசர், கள்ளர் ஆகிய மூவரும்) சீற்றங்கொண்டு தாங்கள் துராக்ருதமாய் மேல் விழுந்து கொள்ளை கொள்ளுகிறார்கள் - என்பது இந்த ச்லோகத்தினாற் சொல்லப்படுகிறது.

இதன் கருத்து எளிதாகத் தெரியவருமன்றோ. எவனுடைய பணம் தருமத்தில் விசேஷமாக செலவிடப்படுகிறதோ அவனுக்கு விபரீதமான பீடைகள் நேரமாட்டா; தருமத்தில் கண் செலுத்தாதவனுடைய பணத்தை நெருப்பு கொள்ளை கொள்ளும்; அரசர்கள் அநேக விதமான வரிகளை விதித்துக் கொள்ளை கொள்வார்கள். கள்ளர்களும் இரவிலும் பகலிலும் புகுந்து, தெரியாமலும் தெரிந்தும் கொள்ளை கொள்வர்.

நெருப்பு கொள்ளை கொள்வதாவது -- வீடு நெருப்புப் பற்றி யெரிந்து வஸ்த்ர, பூஷண, வ்ரீஹி, தண்டுலாதிகள் நிச்சேஷமாக அழிந்து போகை. அரசர் கொள்ளை கொள்வதைப் பற்றி இக்காலத்தில் அதிகமாக எழுத அவசியமில்லையன்றோ!. ஒருவனுக்கு எத்தனை விதமான வரிகள் (சுங்கங்கள்) விதிக்கப்படுகின்றன வென்பது நம்போல்வாரிற் காட்டிலும் பணம் படைத்தார்க்கு விசேஷமாகத் தெரியும்; கள்ளர் கொள்ளை கொள்வது அனைவர்க்கும் அனுபவத்திலுள்ளது.

இந்த ச்லோகத்திற்கு -- அவரவர்கள் தருமம் செய்யவேண்டியது ஆவச்ய்கமென்று ப்ரரோசனம் செய்வதில் முக்கியமான நோக்கு.


Source:
அறுபத்து மூன்று உபன்யாசமாலை - (53) - 1954, pp. 10-11.
From my Collections.


Saturday, July 11, 2015

முஸலகிஸலயம் (Musalakisalayam)

வித்வான்கள் உகக்கும் ஹாஸ்ய கதை ஒன்று

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar

ஒரு வித்வான் தம்முடைய பரமஸுந்தரியான மகளுக்கு வரன் தேடிக் கொண்டிருந்தார். அவரும் அவருடைய குமாரர்களும் இப்பெண்ணும் ஆக எல்லாரும் நன்கு ஸம்ஸ்க்ருதம் படித்தவர்களாதலால் நன்றாகப் படித்த வரன் வேணுமென்று தேடிக் கொண்டிருந்தார். ஒருவர் தம்முடைய குமாரனுக்கு நல்ல படிப்பு இருப்பதாகப் பொய் சொல்லி வஞ்சித்து விவஹத்தை முடித்துக் கொண்டார். அந்த மணவாளப்பிள்ளை பாடசாலைக்குப் போய் வந்து கொண்டிருந்ததனால் மெய்யே படிப்பாளியென்று மாமனார் முதலானவர்களும் ப்ரமித்திருந்தார்கள். விவாஹமோ முடிந்துவிட்டது.

இப்படியிருக்கையில், ஸரஸ்வதீபூஜையன்று முதல் நாள் ஜாமாதாவை மாமனார் தம் இல்லம் வரும்படி அழைத்தார். ஜாமாதாவும் தன் தகப்பனாரிடம் உத்தரவு பெற்றுக் கொள்ள சென்றான். அப்போது தகப்பனார் "பயலே! உனக்கோ படிப்பு ஒன்றும் பலிக்கவில்லை; உன்னை மஹாபண்டிதனாக நான் பொய் சொல்லி ஏதோ விவாஹத்தை முடித்துவைத்தேன். உன் சாயம் வெளிப்படுவதற்கு இன்று சந்தப்பம் வந்துவிட்டதே! வேறு பண்டிகை நாள்களாக இருந்தால் பாதகமில்லை; இப்போது ஸரஸ்வதி பூஜைக்காக உன்னை யழைக்கிறார்கள். அவர்களெல்லோரும் பெரிய பண்டிதர்களாகையால் அவர்களில்லத்தில் பல பல புஸ்தகங்களுண்டு; அவற்ற்றை யெல்லாம் உன் மாமனாரும் மைத்துனர்மார்களும் எடுத்துப் பரிஷ்காரப்படுத்துவார்கள்; அந்த ஸமயத்தில் நீ அவர்களெதிரில் ஊமைபோல் உட்காந்திருக்க வேண்டியதாகும். உன்னுடைய சாயம் வெளிப்படுவதோடு நில்லாமல் என்னுடைய பொய்ம்மையும் வெளியாகிவிடுமே என்று அஞ்சுகிறேன்" என்றார். அதற்கு அவன் ஒன்றும் பதில் சொல்லமாட்டாமல் தலை குனிந்து நின்றான்.

மறுபடியும் தகப்பனார், "பயலே! நான் ஒரு உபாயம் சொல்லித் தருகிறேன்; நாளை காலை அவசியம் வருவதாக அவர்களுக்கு நீ பதில் சொல்லியனுப்பிவிடு; இன்றிரவு முழுவதும் ஸம்ஸ்க்ருதத்தில் நாலிரண்டு வார்த்தை உனக்கு வரும்படி நெட்டுருப் போட்டு வைக்கிறேன். அதை நீ நாளைக்கு அங்கு உபயோகப்படுத்தினால் ஒருவாறு மானத்தோடு திரும்பி வரலாம்" என்றார். குமாரன் அப்படியே இசைந்தான். 

தகப்பனார் அன்றிரவு முழுவதும் மகனுக்கு பாடம் பண்ணி வைத்தது என்னவென்றால்; உன் மாமனார் ஏதாவது ஒரு பெரிய புஸ்தகம் எடுத்தாரானால் அப்போது நீ, "கிம் இதம் புஸ்தகம்" [किमिदं पुस्तकम्?] என்று கேள்; அவர் இன்ன புஸ்தகமென்று பதில் சொல்லுவர்; அப்போது நீ "இதம் மயா படிதம்" [इदं मया पठितम्] என்று சொல்லு; மறுபடியும் அவர் வேறொரு பெரிய புஸ்தகமெடுக்கும்போதும், "கோயம் ஸ்ரீகோச:" [कोऽयं श्रीकोश:] என்று கேள்; அவர் பதில் சொன்னவுடனே "எததபி மாயா அதீதம்" [एततपि मय अधीतम्] என்று சொல்லு. என்றிப்படிச் சிலவார்த்தைகளை வெகு சிரமப்பட்டுக் கற்பித்து வைத்தார். அவற்றை அப்படியே க்ல்ப்தி செய்துகொண்டு மறுநாள் காலை மாப்பிள்ளை மாமனாரகத்திற்குச் சென்று சேர்ந்தாயிற்று. முன்னாளிரவெல்லாம் நெட்டுருப்போட்ட ஸம்ஸ்க்ருத வார்த்தைகளை உபயோகப்படுத்த ஸமயமும் வாய்த்து விட்டது.

ஸரஸ்வதீ பூஜைக்கு ஆரம்பித்த மாமனார் ஒரு பெரிய ஓலைச் சுவடியை அவிழ்த்தார். "கிம் இதம் புஸ்தகம்" [किमिदं पुस्तकम्?] (இது என்ன புஸ்தகம்?) என்று ஜாமாதா கேட்டார். அதற்கு மாமனார் "அயம் தசோபநிஷத் பாஷ்ய ஸ்ரீகோச:" [अयं दशोपनिषद्भाष्यश्रीकोश: - இது தசோபநிஷத் பாஷ்ய ஸ்ரீகோசம்] என்றார். உடனே மாப்பிள்ளை, "இதம் மயா படிதம்" [इदं मया पठितम्] (இது நான் வாசித்திருக்கிறேன்) என்றான். அது கேட்டு எல்லோரும் ஸந்தோஷித்தார்கள்.
 
மாமனார் மறுபடியும் ஒரு புஸ்தகம் அவிழ்த்தார். "கோயம் ஸ்ரீகோச:?" [कोऽयं श्रीकोश:? - இது என்ன ஸ்ரீகோசம்? ] ன்றான் ஜாமாதா. "சாபரபாஷ்யமிதம்" [शाबरभाष्यमिदम् - இது சபரருடைய பாஷ்யம்] என்றார் மாமனார். "எததபி மயா அதீதம்" [एततपि मया अधीतम्] (இதுவும் நான் வாசித்திருக்கிறேன்) என்றான் ஜாமாதா. இது கேட்டும் எல்லாரும் மஹாநந்தமடைந்தார்கள்.

மாமனார் வேறொரு பெரிய புஸ்தகம் அவிழ்த்தார். அஃது என்னவென்றால், இனி மேல் எழுதுவதற்காக ஏடுகளை சேமித்து வைத்திருக்கிற எழுதாத புஸ்தகம். "கோயம் ஸ்ரீகோச:?" [कोऽयं श्रीकोश:? - இது என்ன ஸ்ரீகோசம்?] என்றார் ஜாமாதா. "அலேகக்ரந்த:" [अलेखग्रन्थ:] (எழுதாத எடு), என்றார் மாமனார். "இதமபி மயா படிதம்" [इदमपि मया पठितम्] (இதுவும் நான் வாசித்திருக்கிறேன்) என்றார் ஜாமாதா. அது கேட்டவுடனே அவர்களுக்கு துக்கம் தாங்க முடியாததாயிற்று. இந்த ஜாமாதாவின் மனைவியும் நன்றாகப் படித்தவளாகையாலே இப்படிப்பட்ட "உலக்கைகொழுந்து" புத்திசாலியான பர்த்தா நமக்கு வாய்ந்தானே! என்று சோகம் பொறுக்ககில்லாமல் "முஸலகிஸலயமே!" [உலக்கைகொழுந்தே!] என்று சொல்லி அவன் தலையில் ஒரு குட்டுக் குட்டி சென்றாளாம். அவன் அந்த அவமானம் பொறுக்கமாட்டாமல் உடனே எழுந்து வெளியேற காசிக்குச் சென்று வெகு ஆஸ்தையுடன் வாசித்து சதுச்சாஸ்த்ர பண்டிதனாய் மீண்டுவந்து "முஸலகிஸலயம்" [मुसलकिसलयम्] என்கிற ஒரு க்ரந்தத்தை இயற்றினானாம். இந்த க்ரந்தம் இப்போதும் கிடைக்கிறதென்கிறார்கள்.

சென்னை ஸ்ரீவைஷ்ணவ க்ரந்த முத்ராபகசபயில் அச்சிட்ட (தெலுங்குலிபி) ஸம்ப்ரதாய அகராதியில் "அழகிய மணவாள சீயர்" என்ற திருநாமத்தின் விவரணத்தில் இந்த "முஸலகிஸலய" க்ரந்த நாம நிர்தேசமும் வேறொரு கதையும் காண்கிறது; அது ஸம்ப்ரதாய கோஷ்டியில் ஏற்பட்ட கதையென்பர்.
 

Source:
-- அறுபத்துமூன்று உபன்யாஸமாலை - (53), 1954, pp.32-34.
-- From my collections.