Thursday, July 2, 2015

யாக பரிசயம்

அக்னிசயனம்
என். ஸோமஸுந்தர தீக்ஷிதர்

Yāgaparicayaḥ - Agnicayana 
N. Somasundara Dikshitar
॥ श्रीगुरुभ्यो नमः ॥

शमीगर्भस्य यो गर्भस्तस्य गर्भस्य यो रिपुः ।
रिपुगर्भस्य यो गर्भः स नो विष्णुः प्रसीदतु ॥

"அக்னிசயனம்" (अग्निचयनम्) என்பது அதற்காக தனிப்பட்ட அமைப்புள்ள செங்கற்க் (इष्टका-இஷ்டகை) களால் செய்யப்படும் ஐந்து அடுக்குகளைக் கொண்ட ஒரு மேடை. அதன்மேல் அக்னியை பிரதிஷ்டை பண்ணி அதில் யாகங்கள் செய்யப்படுகின்றன. அந்த சயனம் பல உருவங்களில் செய்யும் படி வேதத்தில் கூறப்ப்டுகிறது. அவைகளில் ஒன்று "கருடசயனம்" என்பது. அது,

वयसां वा एष प्रतिमया चीयते (तै.सं. 5.5.3.2)

என்று பறவையின் உருவத்தில் செய்யப்படுகிறது. அதிலும், 

श्येनचितं चिन्वीत सुवर्गकामः (तै.सं. 5.4.11.1)

என்று ஸுவர்க்கத்தை விரும்புகிறவன் பருந்து என்ற பறவையின் உருவத்தில் 
செய்யவேண்டும், ஏனென்றால்,

श्येनो वै वयसां प्रतिष्ठः (तै.सं. 5.4.11.1)

பருந்து பறவைகளுக்குள் மிக தூரம் பறக்கும் சக்தி வாய்ந்தது. ஆகையால் அந்த சயனத்தை செய்பவன்,

श्येन एव भूत्वा स्वर्गं लोकं पतति (तै.सं. 5.4.11.1)

என்று பருந்தின் வேகத்தை போன்ற வேகமுள்ளவனாய் ஸ்வர்க லோகத்தையடைகிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சயனம் ஐந்து அடுக்குகளை கொண்டது என்று முன் கூறப்பட்டிருக்கிறது,

पञ्च वा एतेऽग्नयो यच्चितयः (तै.सं. 5.5.9.1-2; Cf. मा.श.ब्रा. 6.2.1.16)

என்று இந்த ஐந்து அடுக்குகளும் ஐந்து அக்னிகள் என்றும், அவைகளுக்கு, 

उदधिरेव नाम प्रथमो दुध्रो द्वितीयो गह्यस्त्रितीयः किँशिलश्चतुर्थो वन्यः पञ्चमः (तै.सं. 5.5.9.1)

என்று பெயரும் கூறப்பட்டிருக்கிறது. அந்த ஐந்து அடுக்குகளுக்கும் ஐந்து "பிரஸ்தாரங்கள்" என்றும் பயர். அவைகளில் ஒவ்வொரு ப்ரஸ்தாரமும் 200 கற்களைக் கொண்டு கட்டப்படுகிறது. இவ்விதம் ஐந்து ப்ரஸ்தாரங்களிலும் சேர்ந்து 1000 கற்கள் ஆகின்றன.

साहस्रं चिन्वीत प्रथमं चिन्वानः (तै.सं. 5.6.8.2)

என்று முதல் சயனத்தை செய்பவன் ஆயிரம் கற்களைக்கொண்ட சயனத்தை செய்ய வேண்டும், என்றும், 

जानुदघ्नं चिन्वीत प्रथमं चिन्वानः (तै.सं. 5.6.8.4)

என்று முதல் சயனத்தைச் செய்பவன் முழங்கால் அளவு உயரமுள்ளதாக செய்ய வேண்டுமென்றும் கூறப்படுகிறது. முழங்கால் அளவு உயர மென்பது முப்பது அங்குளிகள் என்று அர்த்தம்.  அப்பொழுது கற்களின் உயரம் சுமார் ஆறு அங்குளி இருக்கும்.

(१) पक्षाग्रं (२) पक्षः (३) पक्षमध्यं (४) षोडशी (५) अर्धेष्टका (६) पादेष्टका

என்ற பெயருடைய கற்களால் ஒவ்வொரு ப்ரஸ்தாரமும் மந்திரங்களால் அடுக்கப்படுகிறது. அவைகளில் 1-3-5 பிரஸ்தாரங்களில்

(१) पक्षाग्रेष्टकाः 16 (२) पक्षेष्टकाः 80 (३) पक्षमध्येष्टाकाः 8 (४) षोडशीष्टकाः 40 (५) पादेष्टकाः 56

இவ்விதம் மொத்தமாக 200. 2-4 பிரஸ்தாரங்களில்,

(१) पक्षेष्टकाः 112 (२) षोडशीष्टकाः 36 (३) अर्धेष्टकाः 52

இவ்விதம் மொத்தம் 200. ஆகவே ஐந்து பிரசஸ்தாரங்களிலுமாக 1000 கற்கள். இவ்விதம் 1000 கற்களையும் அடுக்கி முடிந்ததும் அதுவே அக்னி ஸ்வரூபமாகிவிடுகிறது. பிறகு யாகம் முடிகிற வரையில் ரித்விக்குகளைத் தவிர மற்றவர்கள் யாருமே அதன்மேல் ஏறக்கூடாது. ரித்விக்குகளும் அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மகாலத்தில் தான் அதன் மேல் ஏறலாம். 

अप वा एतस्मात्प्राणाः क्रामन्ति योऽग्निचिन्वन्नधिक्रामति । (तै.सं. 5.5.9.3)

என்று சயனம் பண்ணும் பொழுதே எவன் அந்த அக்னியை மிதிக்கிறானோ, அவனுடைய பிராணன்கள் அவனை விட்டுப் பிரிந்து விடுகிறான். ஆகையால்,

वाङ्म आसन्नसो प्राणः । (तै.सं. 5.5.9.2)

என்ற மந்திரத்தை ஜபித்து விட்டு அதன்மேல் ஏறவேண்டுமென்று வேதமும், 

वाङ्म आसन्निति सर्वत्रारोहन् प्रत्यवरोहंश्च जपति। (आप.श्रौ. 16.21.14)

என்று ஸூத்திரமும் உபதேசிக்கிறது. இதற்கு "பிரதம சயனம்" என்று பெயர். 

இவ்விதம் முன் கூறியபடி 2000 கற்களைக்கொண்டு செய்யப்படுகிற சயனத்திற்கு "த்விஷாஹஸ்ர சயநம்" என்று பெயர்.

द्विषाहस्रं चिन्वीत द्वितीयं चिन्वानः । (तै.सं. 5.6.8.2)

என்று கற்களின் எண்ணிக்கையும்,
  
नाभिदघ्नं चिन्वीत द्वितीयं चिन्वानः । (तै.सं. 5.6.8.4)

என்று தொப்புள் வரையில் உயரமும், கூறப்பட்டிருக்கிறது. மூன்றாவது சயனம் செய்பவன் 3000 கற்களைக்கொண்டு சயனம் செய்யவேண்டும்.

त्रिषाहस्रं चिन्वीत तृतीयं चिन्वानः । (तै.सं. 5.6.8.2)

என்று கற்களின் எண்ணிக்கையும்,

ग्रीवदघ्नं चिन्वीत तृतीयं चिन्वानः । (तै.सं. 5.6.8.4)

என்று கழுத்து வரையில் உயரமும், கூறப்பட்டிருக்கிறது. முதல் சயனத்தால் இந்த லோகத்தையும், இரண்டாவது சயனத்தால் அந்தரிக்ஷ லோகத்தையும், மூன்றாவது சயனத்தால் ஸ்வர்க்க லோகத்தையும் ஜயிக்கிறான் என்று பலனும் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ஐந்து பலன்கள் கூறப்படுகின்றன.

१. कस्मै कमग्निश्चीयत इत्याहुरग्निवानसानीति वा अग्निश्चीयतेऽग्निवानेव भवति । (तै.सं. 5.5.2.1) 

எந்த காமனையை விரும்பி அக்னி சயனம் செய்யப்படுகிறது என்று பிரம்மவாதிகள் விசாரித்து, சாஸ்த்ரீயமான அக்னியுள்ளவனாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தால் அக்னிசயனம் செய்யப்படுகியது. அதனால் உத்தர க்ரதுக்களுக்கு யோக்யமான அக்னியுடையவனாக ஆகிறான், என்பது முதல் பலன்.

२. कस्मै कमग्निश्चीयत इत्याहुर्देवा मा वेदन्निति वा अग्निश्चीयते विदुरेनं देवाः(तै.सं. 5.5.2.2)

தேவர்கள் இந்த யஜமானன் நன்றாக யாகம் செய்தான்னே என்று என்னைப் பற்றி அறியவேண்டும் என்ற விருப்பத்தால் சயனம் செய்யப்படுவதால், தேவர்கள் இவனைப்பற்றி அறிகிறார்கள், என்பது இரண்டாவது பலன். 

३. कस्मै कमग्निश्चीयत इत्याहुर्गृह्यसानीति वा अग्निश्चीयते गृह्येव भवति(तै.सं. 5.5.2.2)
  
சாஸ்த்ரீயமான கர்மாநுஷ்டானம் செய்ய சமர்த்தனான ஒரு சிருஹஸ்தனாக இருக்கவேண்டும் என்ற விருப்பத்தால் செய்யப்படுவதால் அப்படிப்பட்ட கிருஹஸ்தனாகவே ஆகிறான், என்பது மூன்றாவது பலன்.

४. कस्मै कमग्निश्चीयत इत्याहुः पशुमानसानीति वा अग्निश्चीयते पशुमानेव भवति । (तै.सं. 5.5.2.2) 

நிறைய பசுக்கள் உள்ளவனாக ஆகவேண்டும் என்ற விருப்பத்தால் செய்யப் படுவதால் பசுக்கள் நிறைந்தவனாக ஆகிறான், என்பது நான்காவது பலன்.

५. कस्मै कमग्निश्चीयत इत्याहुः सप्त मा पुरुषा उपजीवानिति वा अग्निश्चीयते त्रयः प्राञ्चस्त्रयः प्रत्यञ्च आत्मा सप्तम एतावन्तमेवैनममुष्मिंल्लोक उपजीवन्ति(तै.सं. 5.5.2.3)

முன்னோகள்ளன பிதா, பிதாமகன், ப்ரபிதாமகன் என்ற மூன்று பேர்களும், பின்னோர்களான புத்திரன், பௌத்திரன், நப்தா என்ற மூன்று பேர்களும் தானுமாக ஏழு பேர்கள் என்னையண்டி ஜீவிக்கவேண்டுமென்ற விருப்பத்தால் செய்யப் படுவதால் அவ்விதமே ஸ்வர்க்க லோகத்தில் இவற்களுக்கு இந்த யஜமானன் ரக்ஷகனாக ஆகிறான் என்பது ஐந்தாவது பலன். தவிர, 

अग्निर्वै देवानामभिषिक्तोऽग्निचिन्मनुष्याणाम्(तै.सं. 5.4.9.2)

என்று தேவர்களுக்குள் அக்னி அபிஷேகம் பண்ணப்பட்டவன் என்றும் மனிதர்க்ளுக்குள் அக்னிசயனம் செய்தவன் அபிஷேகம் செய்யப்பட்டவன் என்றும் மேன்மையாக கூறப்படுகிறது. ஆகையால், 

संवत्सरं न कञ्चन प्रत्यवरोहेत् । (तै.सं. 5.5.4.2)

"அக்னி சயனம் முடிந்த பிறகு ஒரு வருஷம் முடிவடைகிற வரையில் பெரியோர்கள் யார் வந்தாலும் அவர்களை தான் எழுந்து அழைக்க கூடாது" என்று கூறப்பட்டிருக்கிறது.

இவ்விதம் 1000 கற்களால் ஐந்து அடுக்குகளாக கட்டப்பட்ட உருவம் ஆகாயத்தில் பறக்கும் ஒரு கருடனைப் போலவே தோன்றும். அதனால்தான் அந்த உருவத்தை கருடனாக வைத்து

 सुपर्णोऽसि गरुत्मान्......(तै.सं. 4.1.10)

என்று ஆரம்பிக்கும் மந்திரத்தால் "உபஸ்தானம்" (उपस्थानम्) செய்ய வேண்டுமென்று விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சயனங்களில் கடைசி (1000-வது) இஷ்டகையை (கல்லை), உபதானம் செய்தால் அதே அக்னிஸ்வரூபமாய் விடுகிறது என்று முன் கூறப்பட்டது. அப்பொழுது அந்த கடைசி இஷ்டகையில் எருக்கிலையால் வெள்ளாட்டின் பாலால் "ஸ்ரீருத்ர" (श्रीरुद्रः) மந்திரத்தால் ஹோமம் செய்ய வேண்டும். எவ்விதம் ஜனித்த சிசு ஆஹாரத்தை [பாலை] விரும்புகிறதோ அதுபொலிந்த அக்னியும் பாகதேயத்தை விரும்புகிறான். அதற்காக அவ்விதம் ஹோமம் செய்யப்படுகிறது. பிறகு அதன் மேல் அக்னியை ப்ர்ணயனம் செய்த்து "சமக" (चमकः) அனுவாகங்களால் வஸோர்த்தாரை (वसोर्धारा) செய்யப்படுகறது. ஏனென்றால் அந்த அக்னிக்கு "கோரம்" (घोरः-பயங்கரமானது) "சிவம்" (शिवा-மங்களகரமானது) என்று இரண்டு சரீரங்கள் உண்டு. அவற்றில் ருத்ர ஹோமத்தால் கோர சரீரத்தை தணியச் செய்து வஸோர்த்தாரையால் மங்கள சரீரம் திருப்தி செய்விக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருப்பதால் இந்த இரண்டு ஹோமங்களும் செய்யப்படுகிறது. இந்த அக்னி சயனத்த்தைப்பற்றி விரிவாகப் பின்னால் எழுத உத்தேசித்திருப்பதால் இப்பொழுது ஸங்கிரஹமாக கூறப்பட்டிருக்கிறது.
  

No comments:

Post a Comment