Friday, June 26, 2015

அக்னிசயனம் - 7

ஏழாவது நாள்

5-வது அடுக்கின் மீதி இன்று பூர்த்தி செய்யப்படுகிறது. காலை நிகழ்ச்சிக்குப் பிறகு இஷ்டகைகள் அடுக்கப் படுகின்றன. இவற்றின் மூலம் பசுக்களின் க்ஷேமம் கிடைக்கிறது. தனவ்ருத்தி ஏற்படுகிறது. இந்த அடுக்கின் 4 சுக்கான் கற்கள். 10 தங்கத் துண்டுகள், 5 நெய்யின் உருண்டைகள், 5 கரும் கற்கள் - இவை யாவும் வைக்கப் படுகின்றன. இவற்றின் மூலம் ஸ்வர்கப்ராப்தி, நல்ல கீர்த்தி, சத்ருக்களின் தொல்லை ஒழிப்பு முதலியவை கிடைக்கின்றன. நல்ல மழை எல்லா காலத்திலும் கிடைப்பதற்காகவும் சில கற்கள் வைக்கப்படுகின்றன. தேசத்தின் க்ஷேமத்திர்காகவும் சிலவற்றை வைக்கிறோம். இவ்விதம் மீதமுள்ள கற்களை வைப்பதுடன் 5-வது அடுக்கு முடிவுபெறுகிறது. இந்த 1000 கற்களும் பசு மாடுகளாக வேதம் கூறுகிறது. எனவே ஒவ்வொரு அடுக்கிலும் ஒரு காளை மாட்டு இஷ்டகை (ऋषभेष्टका-ரிஷபேஷ்டகா) வைக்கப்படுகிறது. இந்த கற்கள் யாவும் கேட்டதை கொடுக்கவல்லவை என வேதம் கூறுகிறது. பிறகு அப்ப்ரோழுதே அன்றைய 2-வது ப்ரவர்க்யம் முதலியவற்றை முடித்துக் கொண்டு இந்த 5 அடுக்குகள் கொண்ட அக்னியை – ஆம் இதற்கு "அக்னி" என்று தான் பெயர் – ஆஜ்யத்தாலும் 1000 தங்கத்துண்டுகளாலும் ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும். பிறகு ஒரு வில், அம்பு இவற்றை அத்வார்யுவுக்கு தானம் செய்து நமஸ்காரங்களால் அக்னியை வணங்க வேண்டும். (இங்கு அக்னி என்ற பதம் 5 அடுக்கிலுள்ள கருடாகாரத்திளிருக்கும் 1000 கற்களேயே குறிக்கும்).

பிறகு எருக்கன் இலையால் ஆட்டுப் பாலை கடைசியாக வைத்துள்ள செங்கல் மீது ஸ்ரீருத்ரத்தை சொல்லி ஹோம்ம் செய்ய வேண்டும். இதனால் அக்னி பகவானின் கோபம் தணிகிறது. இது சிவாராதனமாகும். (முன்பு புருஷஸூக்தம் வந்துள்ளது மறக்கலாகாது). பிறகு அக்னிக்கு நீரால் பரிஷேசனம் செய்ய வேண்டும். பிறகு நீர் நொச்சி, பாசை, தவளை இவற்றை ஒரு மூங்கிலில் கட்டி அதை அந்த சிதியின் மீது நன்றாக் துடைத்து போட்டுவிட வேண்டும். இதனால் அக்னிக்கு சாந்தி ஏற்படுகிறது. பிறகு யாகம் செய்தவரும் அத்வர்யுவும் பாதுகாப்பிற்காக காலில் மான்தோலினால்  (கிருஷ்ணாஜினம்) செய்த செருப்ப்பை அணிந்து அந்த அக்னியின் மீது ஏறி பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு பாப நிவர்த்திக்காக சில ஹோமங்கள் முதல் நாள் ஊரவைத்த ஸமித்துக்களை ஹோமம் செய்ய வேண்டும். பிறகு கார்ஹபத்யத்திலிருந்து அக்னியை எடுத்துக்கொண்டு கருடாகாரத்திலுள்ள அடுக்கின் மீது வைக்க வேண்டும். இங்கு ஒரு இஷ்டி வருகிறது. “வைச்வானரேஷ்டி” (वैश्वानरेष्टिः) என்று பெயர். இதில் அக்னி பகவானுக்கு ஒரு புரோடாசம் பூர்ணமாக அளிக்கப்படுகிறது. இதைப் போன்று வேறு எங்கும் இல்லை. இந்த யாகமானது அக்னி பகவானின் ஆத்மாவாகவும் இதனால் யாகம் செய்பவர் உயர்வு பெறுகிறார் என்றும் வேதம் கூறுகிறது.

பிறகு “சமக” (चमक:) அனுவாகங்களால் “வஸோர்த்தாரா” (वसोर्द्धारा) ஹோமம் செய்யப்படுகிறது. இது ஸ்ரீ அம்பாளின் ஆராதனம் ஆகும். எனவே மஹாக்னிசயனத்தில் விஷ்ணுவின் ஆராதனம் ஸ்ரீபரமசிவனின் ஆராதனம் ஸ்ரீஅம்பாளின் ஆராதனம் மூன்றும் வருகிறது. ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் “ரத்ன-த்ர்ய-பரீக்ஷா” (रत्नत्रयपरीक्षा) என்று ஒரு க்ரந்தம் எழுதியுள்ளார். அதில் இந்த மூன்று தேவதைகளையும் ஸ்துதி செய்துள்ளார். இந்த மஹாக்னிசயனத்தை மனதில் வைத்துக்கொண்டு இதை எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. பிறகு நாட்டில் விளையும் 7 தான்யங்கள், காட்டில் விளையும் 7 தான்யங்கள் இவற்றை அன்னமாக செய்து அந்த அன்னங்களால் அத்தி மரத்தால் செய்த கரண்டியால் ஹோமம் செய்ய வேண்டும். அந்த ஹோமம் செய்த மீதியை யாகம் செய்தவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதனால் யாகம் செய்பவர் பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர் போல் ஆகிவிடுகிறார். இதனால் இவர் மற்றவர்களைவிட உயர்ந்து விடுகிறார். பிறகு தயிர் தேன் கலந்த 12 ஹோமங்களும் மற்றும் கணக்கற்ற பல மந்த்ரங்களால் பல ஹோமங்களும் செய்யப்படுகின்றன. இங்கு (वायु) காற்றும் ஒரு ஹோமப் பொருளாக கூறப்பட்டு 3 ஹோமங்கள் சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக இவற்றின் பயன் லோக க்ஷேமமாகும்.
 
பிறகு ஸோமயாகத்தில் வருவது போல் “ஹவிர்தான” (हविर्धानम्) நிர்மாணம், “ஸதஸ்” (सदस्)  நிர்மாணம் முதலியவை உண்டு. ரித்விக்குகள் உட்காரும் இடத்திலும் கற்கள் வைக்கப் படுகின்றன. பிறகு அக்நீஷோமீய ஹவிஸ் சோமயாகம் போன்றே வருகிறது. அதன் பிறகு 8 ஹவிஸ்ஸுகளை கொண்ட “தேவஸுவேஷ்டி” (देवसुवेष्टि:) வருகிறது. இது ஒரு சிறப்பு அம்சம். இத்துடன் சயனத்திற்கான விசேஷங்கள் முடிவுற்ற மாதிரிதான். சயனத்திற்கான விசேஷ ப்ரயோகங்கள் அதிகமில்லை. இரவு ஸுப்ரஹ்மண்யாஹ்வானத்துடன் ஸோமயாகம் போலவே முடிவு பெறுகிறது. 

-- Continued in the next post - 8

No comments:

Post a Comment