Friday, June 26, 2015

அக்னிசயனம் - 8

எட்டாவது நாள்

இன்றுதான் “ஸுத்யாஹஸ்” (सुत्याहस्). முதல் நாள் இரவே ப்ரயோகம் ஆரம்பிக்கும். பலவித ஸாமாக்கள், ரிக்வேத மந்த்ரங்கள் என்று ஆரம்பித்து மறுநாள் காலை 10 மணி வரை இடைவிடாது ப்ரயோகம் உண்டு. சயனத்துடன் உள்ள அதிராத்ரமானால் 29 ஸ்தோத்ரங்கள் - சஸ்த்ரங்கள் வருகின்றன. கடைசியில் "ஆச்வினம்" (आश्विनः) வருகிறது. இது 1000-க்கும் மேற்ப்பட்ட ரிக்வேத மந்த்ரங்களைக் கொண்டது.

இன்று தக்ஷிணாகாலத்தில் ப்ரஹ்மாவிற்கு தங்கக் கிண்ணத்தில் தேன் விட்டுத் தர வேண்டும். அத்வர்யுவிற்கு விசேஷமான பசு மாடுகளை தர வேண்டும். அவபிருதத்திலும் 3 கற்கள் வருணனுக்கு வைத்து அவப்ருதம் செய்ய வேண்டும். “உன்னை அடைந்தேன், உன்னை அடைந்தேன்” (அக்னியே) என்று அந்த மந்த்ரத்தின் அர்த்தம். இதைவிட சிறந்த லாபம் மனிதனுக்கு இருக்க முடியாது.

முடிவுரை
 

இந்த மஹாக்நிசயனத்தின் பெருமையே வாழ்நாள் முழுவதும் பார்த்து ரஸிக்கலாம். இதில் அச்வமேதம், ராஜஸூயம் தவிர மற்ற யாகங்கள் யாவும் வருகின்றன. அக்னிசயனம் செய்தவர் நரகத்திற்கு செல்லமாட்டார் என்று சாஸ்திரம் கூறுகிறது. இதையே “வைகானஸர்” என்ற முனிவரும் ஊர்ஜிதம் செய்கிறார். அது மட்டுமல்ல; இவரைப் பார்த்தாலே புண்யம் என்று ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.

अग्निचित्कपिला सत्री राजा भिक्षुर्महोदधिः दृष्टमात्रा पुनन्त्येते......
 
அக்னிசயனம் செய்தவர், காராம்பசு, “ஸத்ர” (सत्रः) யாகம் செய்தவர், ராஜா, நல்ல ஸன்யாஸி, ஸமுத்ரம், - இவை பார்த்த மாத்ரதிலேயே நம்மை சுத்தம் செய்கின்றன.
 
இந்த மஹாக்னிசயனத்தின் அங்கமாக “ஸௌத்ராமணி” (सौत्रामणि:) என்ற யாகம் 3 ஹவிஸ்களைக் கொண்டு செய்ய வேண்டும். “ஸுத்ராமா” (सुत्रामा) என்ற தேவதையே பிரதானமாக வைத்து செய்வதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது. “ஸுத்ராமா” என்று  இந்தரனுக்கு பெயர். இந்த்ரன் என்ற பெயர் இங்கு பரமசிவனைக் குறிக்கும். புராண பிரசித்தரான இந்த்ரனை அல்ல. இந்த யாகத்திலும் அவபிருதம் உண்டு.
 
பிறகு “மைத்ராவருணீ” (मैत्रावरुणी) என்ற இஷ்டி உண்டு. பாலை காய்ச்சி அதில் தயிரை விட்டு பாலை முறித்து அந்த ஹவிஸ்ஸை ஹோமம் செய்ய வேண்டும்.
 
இதுதான் மஹாக்னிசயனத்தின் விசேஷ கார்யக்ர்மங்களின் சிறிய குறிப்பு. தெரிந்தவரை எழுதி உள்ளேன். ஸாரம் இருந்தால் க்ரஹித்து என்னை அனுக்ரஹிக்குமாறு வித்வான்களை வேண்டுகிறேன்.

 

No comments:

Post a Comment